Tuesday, February 9, 2010

பிரிவு

ஒரு இனிய காலை பொழுதில் தைமாத முகூர்த்த நன்நாளில் இருவரும் இணைத்தனர். ஆமாம் அனைவருடைய ஆசிகளுடனும் மிகவும் மயக்கமான நினைவுகளுடனும் ஹோமம் புகைமண்டலத்தின் களைப்புடனும் இருவரும் தனது கண்களாலேயே போராட்டம் நடத்திக்கொண்டனர். இனிய நிறைவான தம்பதிகளான மகேஷும் ரம்யாவும் தான் அவர்கள். திருப்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் உருண்டோடி இருந்தது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைக்கவரை அவசர அவசரமாக தேடினாள். எடுக்க எடுக்க ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருந்தது. இவ்வளவு சீக்கிரம் இதற்கு தேவை வந்து விட்டதே என்ற மன வேதனையுடன் அவசரமாக மாத்திரையை எடுத்து விழுங்கினாள். வேகமாக வாசலுக்கு வந்தவள் ஏனோ தடுமாறினாள். படிதவறி கீழே விழுந்தாள்.

தலையில் சிறிது காயம் சமாளித்துக்கொண்டு கீழே விழுந்த தனது ஹன்ட் பேக்கை எடுத்து தனது ஸ்கூட்டியில் மாட்டிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள். காலையில் நிகழ்ந்த நிகழ்ச்சியை எண்ணியவளாய் வந்தவள், எதிரில் வரும் லாரியின் வேகத்தை உணரத்தெரியாதவளாய் கம்பத்தில் இடித்து தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். பிறகு ஹாஸ்பிட்டல் டாக்டர் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை என்ற வார்த்தையை கேட்ட அவளது விழியில் முதல் நாளில் இருந்து ஏற்ப்பட்ட கசப்பான சம்பவத்தை அசைபோட தொடங்கியது.

திருமணம் தேன்நிலவு முடிந்து ஒரு வாரம் கழித்து அன்றுதான் முதல் நாள் அலுவலகத்திற்கு கிளம்பினாள் ரம்யா. பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் மற்றவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு அவளுடையது. ரோஸ் நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு தலையின் ஓரத்தில் ரோஜா ஒன்றை வைத்திருந்தாள். அது அவளது அழகை இன்னும் மெருகேற்றியது. மகேஷ் அவளை பார்த்தான் எனக்கே இவ்வளவு அழகாய் தெரிகிறவள் மற்றவர் கண்களுக்கு எப்படி தெரிவாள் என்று எண்ணியவன் ரம்யா நீ வேலைக்கு தானே செல்கிறாய் என்றான். கணவன் எதற்கு அவ்வாறு கேட்க்கிறான் என்று தெரியாமலே ஆமாம் என்றால் கனிவான குரலுடன்.

அவனது அடுத்த வார்த்தைகளை எதிர்பாராதவளாய் அவனைப்பார்த்தாள். இல்ல மற்றவர்களை மயக்குவதற்காக போகிறாயோ என்று நினைத்தேன் என்றான். அவனது கடுமையான வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போனாள் ரம்யா. பிரோவில் இருந்து ஒரு கலர் மங்கிய புடவை ஒன்றை எடுத்து கொடுத்து இனிமேல் நீ இதை அணிந்து கொண்டு தான் வேலைக்கு போகவேண்டும் என்று கூறினான். அதைக்கட்டிக்கொண்டு மிகுந்த மன உளைச்சலுடன் அவள் அலுவலகத்திற்கு சென்றாள். அவளது அலுவலகத்தில் அனைவரும் ஏன் இவ்வளவு சோர்வாக வந்திருக்கீங்கன்னு வினவினார்கள். திருமணம் முடிந்து இன்று தானே அவள் முதல் நாள் வேலைக்கு வந்திருக்கிறாள். எல்லாம் போக போக சரியாகிவிடும் என்று அவளது தோழி கூறி கிண்டல் செய்தாள். அனால் போக போக தனது வாழ்க்கையே போய்விடும் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள் ரம்யா.

அவளுக்கான வாழ்விலும் சரி சாவிலும் சரி அவள் எந்த விதமான கனவையுமே கண்டதில்லை. மிகவும் கனிவான பெண் . அன்று விடுமுறை நாள் மகேஷ் டிவி பார்த்துக்கொண்டிருந்தான் ரம்யா சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தாள் வாசலில் அம்மா என்ற கூக்குரல் பிச்சைக்காரன் நேற்று மீந்த பழைய சாதத்தை கீழே கொட்ட மனமில்லாதவளாய் அந்த பிச்சைக்காரனுக்கு கொண்டு வந்து போட்டாள். சற்றும் அவள் எதிர்பாராதது அவனது வார்த்தைகள் ஈட்டி போல் பாய்ந்தன. வெளியில் பிச்சைக்காரனது குரல் எனக்கே கேட்கவில்லை உனக்கு மட்டும் எப்படி கேட்டுச்சி அவனை உனக்கு ரொம்ப நாளாக தெரியுமா. டெய்லி வருவான? நான் இல்லாதப்ப வருவானா பிச்சைக்காரனா இருந்தாலும் அவனும் ஆம்பளை தான் அதனால் தான் சமையல் விதவிதமா பண்றையா. டெய்லி நீ வெளியில நிக்கற மர்மம் இதானா என்று மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை அவளிடம் வீசினான். அவளது கன்னத்தில் பாளார் என்று அறைந்தான். அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

அவனது கடுமையான சொற்களை கேட்டுக்கொண்டிருந்த பிச்சைக்காரன், பாவம் அவனென்ன செய்வான் சாப்பாடு போட்ட அவங்களுக்கே இந்த அவல நிலைன்னா தனக்கு என்ன நேருமோ என்று எண்ணிய அவன் அடுத்தகணமே வெளியேறினான். அவன் அடித்ததில் மயங்கி விழுந்த அவள் எழுந்திருக்கவே இல்லை டாக்டர் செக்கப் பல அவமானங்கள், இன்னல்கள், அலட்சியங்கள் என்று ஒரு முகமூடி உலகத்தை சுற்றியே அவள் வாழ்ந்து வந்தாலும் அவனிடம் அன்பு செலுத்துவதற்கு அவள் தவறியதே இல்லை ஆமாம் அவள் தாயாகும் கனவு தான் அது.

ஒரு பெண்ணின் மனதிற்குள்ளேயும் அழகான பூவாக மலரத் துடிக்கும் துடிப்பு அது டாக்டர் அவள் தாயாக போவதாக தெரிவித்தார். எவ்வளவு கஷ்டமான மனநிலையில் ரம்யா இருந்தாலும் தான் ஒரு கருவை சுமக்கும் தாயாக போவதை எண்ணி மிகவும் உச்சிமுகர்தாள். ஆனால் அதை மகேஷிடம் தெரிவித்த பொழுது அவன் பேசிய வார்த்தைகள் எந்த பெண்ணாளுமே கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று. முதல்ல அந்தக் கருவுக்கு சொந்தக்காரன் நாந்தான்னு சந்தேகமில்லாமல் தெரியட்டும் அப்பறம் பாக்கலாம் என்ற அவனது சொற்கள் மின்சாரத்தை போல் அவளைத் தாக்கியது. அவளது இதயத் துடிப்பே நின்று விட்டாலும் மறக்குமா இந்த வார்த்தைகள். ஆனால் இன்று மகேஷ் அவளது பாதங்களைப் பற்றிக் கொண்டு அழுதான், என்னை விட்டு போய்டாதே நீயில்லாம என்னால் ஒரு நொடி கூட வாழமுடியாது. நான் உனக்கு மிகவும் கொடுமையான செயலை செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு என்று கதறினான். கிடைத்த பொக்கிஷத்தை பாதுகாக்கத் தெரியாத கிராதகன் நான். என்னை விட்டுட்டுப் போய்டாத ரம்யா என்று அழுதான் கண்ணீர்விட்டான். அதை செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ரம்யா உண்மையாகவா சொல்கிறீர்கள் என்று பேசிய அவளது விழிகளில் கடைசியாக நீர்த்துளி, ரம்யாவின் கண்கள் இருண்டன...

Wednesday, December 9, 2009

அனுபவங்கள்

மாணிக்கம் மாணிக்கம் என்று கூப்பிட்டாள் மரகதம், என்னம்மா நாளைக்கு உங்க அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் அதற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் சென்சிட்டியப்பா? மாணிக்கம் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் திறமைசாலி. அவனது அப்பா மளிகை கடை ஒன்றை நடத்திவந்தார். மாணிக்கத்திற்கு என்று தனியாக கடை ஏதும் வைத்து தரவில்லை என்றாலும் அவனது அப்பாவிற்கு பிறகு அந்த கடைக்கு உரிமையாளன் அவனே. மாணிக்கத்திற்கு ஒரு தங்கையும் உண்டு அவளது கல்யாணத்தை அங்கே இங்கே கடனை வாங்கி ஒரு வழியாக திருமணத்தை முடித்து வைத்திருந்தான். அதற்குள் அவனது அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் அவருக்கு ஹார்ட் ஆப்பரேசன் செய்தே ஆகவேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.


தெரிந்தவர்கள் அனைவரிடமும் இப்போது தான் கடன் வாங்கி இருந்தான். பாவம் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தான் அவனது பாலிய சிநேகிதனான முருகன் அவனது நினைவிற்கு வந்தான். அவன் அவனது தங்கையின் திருமணத்திற்கு வந்த போது உனக்கு எந்த உதவிவேண்டுமானாலும் தயங்காமல் தன்னிடம் வந்து கேட்குமாறு கூறியிருந்தான். அது மாணிக்கத்தின் நினைவிற்கு வந்தது. ஆனால் என்ன செய்வது மாணிக்கம் இருப்பது கிராமத்தில் முருகன் இருப்பதோ டவுனில். எப்படியும் போய் வர ஒரு நாள் ஆகிவிடும். என்ன செய்வது பணம் வேண்டுமே. தனது அம்மாவான மரகதத்திடம் விஷயத்தை கூறி விட்டு டவுனுக்கு சென்று முருகனை சந்தித்தான்.


தனக்கு பணம் தேவைப்படுவதையும் தனது தந்தைக்கு ஆப்பரேசன் செய்தியையும் முருகனிடம் தெரிவித்தான். அவனும் மாணிக்கம் கேட்ட தொகையான ஒரு லட்ச ரூபாயை கடனாக கொடுத்தான் ஆனால் சீக்கிரம் திருப்பி தந்துவிடவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தான். அந்த தொகையை வாங்கிக்கொண்டு காலையில் தான் வீட்டிற்கு வந்து அமர்திருந்தான் மாணிக்கம். என்னப்பா உன்னுடைய சிநேகிதனான முருகன் பணம் கொடுத்தானா என்று மரகதம் கேட்டாள். கொடுத்தான் அம்மா. அந்த பணத்தை கொண்டுபோய் காலையிலேயே ஆஸ்பத்திரியில் கட்டிவிட்டு ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு தான் அம்மா வந்தேன் என்று கூறினான் மாணிக்கம். ஒரு வழியாக அப்பாவிற்கு ஹார்ட் ஆப்பரேசன் நல்ல படியாக முடிந்தது. திரும்பிப்பார்ப்பதற்க்குள் நான்கு மாதங்கள் உருண்டோடின. முருகனுக்கு பணத்தை புரட்டி எப்படியாவது கொடுக்க வேண்டும்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்.


மளிகை கடையில் முன் மாதிரி ஓஹோ என்று வியாபாரம் நடப்பதில்லை இருந்தாலும் அன்னன்னிக்கு வரும் வருமானத்தை வைத்து கடையை நடத்தி வந்தான் மாணிக்கம். வெகு நாட்கள் ஆகியும் மாணிக்கத்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் முருகனே மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து விட்டான். என்ன மாணிக்கம் பணத்திற்கு என்ன பண்ணபோறே என்றான் முருகன். மாணிக்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்து விடுகிறேன் என்றான். பணம் கொடுத்தே ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது இதற்கு மேல் நீ எங்கிருந்து ரெடி பண்ணுவே. எனக்கு அவசரமா பணம் தேவைபடுகிறது. நீ ஒன்னு பண்ணு ஏன் இந்த மளிகை கடையை வைத்துக்கொண்டு இங்கு இவ்வளவு கஷ்டபடறே. பேசாம இத வித்துட்டு என்னோடு டவுனுக்கு வந்திடு. அங்கே உனக்கு தெரிந்த தொழில் செய்து பிழைத்துக்கொள் என்று கூறினான்.


மாணிக்கம் அவனது பேச்சில் உள்ள சூட்சமத்தை அறியாதவனாய் அந்த மளிகை கடையை அவனுக்கே விற்று விட்டு முருகனிடம் கடனை திருப்பி கொடுத்து விட்டான். தனது பணம் கைக்கு வந்தவுடன் ஊருக்கு புறப்பட்டான் முருகன். மாணிக்கம் தனது அம்மாவிடம் தானும் ஊருக்கு புறப்படுவதாக கூறினான். மரகதம் எவ்வளவோ கூறியும் மாணிக்கம் கேட்கவே இல்லை. முருகனுடன் டவுனுக்கு புறப்பட்டான். மாணிக்கத்திற்கு மளிகை கடையை தவிர வேறு எதுவும் தெரியாது. அங்கு என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் சின்னதாய் ஒரு கடையை வைத்தான். ஆரம்பத்தில் நிறைய வியாபாரம் நடந்தது. ஆனால் போக போக மாணிக்கம் தடுமாற ஆரம்பித்தான். அனைவரும் நான் முருகனது சொந்தக்காரன், முருகனுக்கு வேண்டியவர்கள் என்று கூறி பொருட்களை கடனாகவும், சிலர் காசு கொடுக்காமலும் பெற்றுச் சென்றனர்.


முருகனது வீட்டாரும் அனைத்து பொருட்களையும் இங்கேயே வாங்கிச்சென்றனர். தனக்கு பணம் கொடுத்து உதவியவனாச்சே அதனால் காசு வாங்க மனம் வரவில்லை மாணிக்கத்திற்கு. இப்படியே சில நாட்கள் உருண்டோடின. கடையில் ஒவ்வொரு பொருட்களாக தீர ஆரம்பித்தது, ஆனால் கல்லாவில் பணம் சேரவில்லை . மாணிக்கம் முருகனிடம் சென்று பணம் கேட்டான் அவனும் கொடுத்தான். ஆனால் எவ்வளவு நாளைக்குதான் இப்படி பணம் வாங்கி வாங்கி பொழப்பு நடத்துவது. ஆரம்பத்தில் கொஞ்சம் பணமாவது தன் தாய்க்கு அனுப்பிவைத்த மாணிக்கம் இப்போது அதை அனுப்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். கடை மிகவும் கடனில் ஓட ஆரம்பித்தது. அவன் கிராமத்தில் இருந்தால் அன்றன்று வரும் வருமானத்தை கொண்டு எப்படியோ பிழைத்துக்கொண்டு வந்தான். இங்கு அதுவும் போய்விட்டது. சிறிது நாட்களில் கடைக்கு வாடகை கொடுக்காததால் கடையை காலி செய்து தர சொன்னார்கள். முருகனிடம் இதை தெரிவித்த போது இதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. என்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை என்று கூறி விட்டான்.


மாணிக்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அப்போது தான் தனது தாய் மரகதம் கூறியதை உணர்ந்தான். கூழோ கஞ்சியோ இங்கேயே எதோ ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறினாள். மாணிக்கம் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் விற்று விட்டு முருகனிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு மற்ற கடன் களையும் சரி கட்டி விட்டு ஊருக்கு புறப்படுவதாக கூறினான். முருகன் இங்கேயே சிறிது நாள் இருந்து வேறு வேலை எதாவது ஏற்பாடு செய்து தருவதாக கூறினான். அதற்கு மாணிக்கம் இல்லை எனது கிராமதிற்கே சென்று பிழைத்துக்கொள்வதாக கூறிவிட்டு தனது தாய்தந்தையரிடமே வந்து விட்டான். மரகதம் வெகு நாள் கழித்து மாணிக்கத்தை பார்ப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். மாணிக்கம் நீ அனுப்பிய காசுகளை நான் செலவு செய்தது போக மீதியை பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன். இந்தா அதை வைத்து ஒரு பெட்டிக்கடை வைத்து அதில் வரும் வருமானத்தை கொண்டு பிழைத்து கொள்ளலாம் என்று கூறினாள் மரகதம். தனது தாயின் பரிவை எண்ணி கண்களில் நீர் மல்க தனது தாயை அணைத்துக்கொண்டான் மாணிக்கம்.